திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை வார்டுகளை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மார்ச் 29ந்தேதி மாலை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள வசதிகளைக் கேட்டறிந்தார். மேலும் வார்டுகளில் உள்ள மெத்தைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டுடனர். நோய்த் தொற்று பரவுவதால் மேலும் கூடுதலாக மருத்துவமனைக்கு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்கிற கோரிக்கையை மருத்துவர்கள் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் வீரமணி லவுட் ஸ்பீக்கரில் அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளை நீங்கள் செய்து தரவேண்டியதை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள சென்றார் அமைச்சர் வீரமணி. அந்தத் தொகுதி எம்.எல்.ஏவான தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர்கபிலுடன் சேர்ந்து மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு வார்டுகளை ஆய்வு மேற்கொண்டனர்.