நாடு முழுவதும் இன்று (26-11-24) இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட 75வது ஆண்டு ஆகும். எனவே, இந்த நாளை கூடுதல் சிறப்புடன் மத்திய அரசு கொண்டாடுகிறது.
இதனை முன்னிட்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டார். அதன் பிறகு, அரசியல் சாசனத்தின் முன்னுரை வாசிக்கப்பட்டது. மேலும், சமஸ்கிருதம் மற்றும் மைதிலி மொழிகளில் அரசியல் சாசனத்தின் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் அரசியல் சாசன தினத்தையொட்டி, தனியார் சட்டக் கல்லூரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மொழியால் ஏற்படும் பிரிவினைவாதம் ஆபத்தானது. இன்னும் தீண்டாமை உள்ளது. மொழியை வைத்து பிரிவினையில் ஈடுபடுகின்றனர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என பிரிவினை காட்டப்பட்டது. இந்தியா என்பது ஒரே நாடு” என்று தெரிவித்தார்.