தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனோ சோதனை நடத்தப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர், வெளி மாவட்ட, வெளி மாநில, வெளிநாட்டு பக்தர்கள் 10 - 15 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பக்தர்கள் நுழையும், கிழக்கு, வடக்கு, தெற்கு கோபுர வாசல்களில், காய்ச்சலை கண்டறியும் அதிநவீன தெர்மல் ஸ்கீரினிங் மீட்டர்களை கொண்டு பக்தர்களை பரிசோதனை செய்வது இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இதை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டு கோயில்களில் முதல் முறையாக இந்த முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சோதனையில், காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக அங்கு தயார் நிலையில் இருக்கும் மருத்துவக் குழுவினரிடம் மேற் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு கரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.