குடிதண்ணீர் பிடிப்பதற்காக பொதுமக்கள் முன்கூட்டியே வரிசை போடுவதற்கு டப்பா வாளியை போட்டு விட்டு அதன்பின் அந்த இடங்களில் வரிசையாக நின்று தண்ணீர் பிடிப்பது பார்த்திருக்கிறோம். அதுபோல் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் ஏதாவது ஒரு பொருளை முன்கூட்டியே போட்டுவிட்டு அந்த இடத்தில் மீண்டும் நின்று ரேஷன் பொருட்களை மக்கள் வாங்கிச் செல்வதை பார்த்து இருக்கிறோம் ஆனால் இங்கே காலணிகளை அடையாளம் வைத்து நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.
திண்டுக்கல்லில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தொடக்கிவைத்து அங்குவந்த மக்களுக்கு இலவச உணவுகளை வழங்கினார். அதன்பின் தனது ஆதரவாளரான முன்னாள் கவுன்சிலர் மோகன் தனது கோபால் நகரில் உள்ள மக்களுக்கு, அமைச்சர் சீனிவாசன் மூலம் நிவாரண பொருட்கள் கொடுக்க இருந்தார். அதற்காக சமூக இடைவெளிக்கான வட்ட வடிவ அடையாளங்களும் அப்பகுதியில் உள்ள ரோட்டில் போடப்பட்டிருந்தது.
இந்த விஷயம் அப்பகுதி மக்களுக்கு தெரியவே உடனே குடி தண்ணீர் பிடிப்பதற்கு இடம் போடுவதுபோல் சமூக இடைவெளி விட்டு வட்டம் போட்டு உள்ள இடங்களில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள காலணிகளை கொண்டுவந்து அடையாளமாக வைத்து விட்டுச் சென்றனர். இப்படி ரோட்டில் அரை கிலோ மீட்டருக்கு அடையாளம் போடப்பட்ட வட்டத்தில் காலணிகளாகவே காட்சியளித்தது. அதன்பின் 11 மணிக்குமேல் வந்த வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம், அப்பகுதி மக்கள் அந்த வட்டங்களில் நின்று நிவாரண பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
அதன்பின் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஒட்டன்சத்திரம், பழனியிலுள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதி முருகன், நகர அர்பன் பேங்க் தலைவர் பிரேம் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும் பெரும் பாலானோர் கலந்து கொண்டனர்.