சிவகாசியில் கிருமி நாசினி அறையை திறந்துவைத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “விருதுநகர் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி, நான் உட்பட அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை தொடர்ந்து சிறப்பாக செய்வதால் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு செய்கின்ற உதவி ஒருபக்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் செய்கின்ற உதவிகள் ஒருபக்கம், மேலும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உட்பட, கூட்டு முயற்சியால் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பின்பற்றி பிரதமர் மோடி கரோனா தடுப்பு நடவடிக்கையில் திடமான முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறார். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து எடுத்துவரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கேலி செய்பவர்கள், இந்த நாட்டின் சமுதாய, சமூக விரோதிகளாகதான் இருக்க முடியும். குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். இது அரசர் காலம் முதல் இப்போது வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. காலையில் இட்லி கொடுத்தால், ஏன் பொங்கல் கொடுக்க மாட்டீர்களா என்பார்கள். மதியம் சாப்பாடு கொடுத்தால், ஏன் பிரியாணி கொடுக்க மாட்டீர்களா என்பார்கள். குறை சொல்பவர்கள் நிச்சயமாக நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். குறை சொல்பவர்கள் அவர்கள் என்ன சமுதாய பணிகளைச் செய்தார்கள் என்று நினைத்துப் பார்த்தால், குறை சொல்ல மாட்டார்கள்.
பாரத பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று 9 மணிக்கு 9 நிமிடங்கள் தீப ஒளி ஏற்றினோம். அதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமை, தமிழகத்தின் ஒற்றுமை உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது. கடவுள் இல்லை என்று பேசுவோர் மத்தியில் கடவுளைப் பற்றி பேசினால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. சமூகப்பணியில் குறை கூறிக் கொண்டிருக்காமல் அனைவரும் இணைந்து செயல்பட்டால் இந்தியாவைவிட்டு கரோனா வைரஸை விரட்டியடிக்க முடியும்” என தெரிவித்தார்.