கள்ளக்குறிச்சி, சீதாராம் நகரில் வசித்து வருபவர் 44 வயது சுப்பிரமணியம். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20ஆம் தேதி கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதோடு அவர் வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த 22ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கண்ட்ரோல் ரூமிலிருந்து சுப்பிரமணியனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் உங்களுக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளது, அதனால் சிறப்பு முகாமிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து அரசு மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் சுப்பிரமணியனை தொடர்புகொண்டு உங்களை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் அவரை அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவில்லை.
இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பதால் கரோனா பாதிப்பு என்று கூறப்பட்டதும், இனிமேல் காலதாமதம் செய்யக்கூடாது என்று மேல்மருவத்தூர் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கரோனா நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கிருந்த மருத்துவர்கள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்ட மருத்துவ சான்றிதழை கேட்டுள்ளனர். இதையடுத்து சுப்பிரமணியன் தனது உறவினர்கள் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தனக்கு பரிசோதனை செய்யப்பட்ட கரோனா ரிசல்ட் கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கான கரோனா பரிசோதனை ரிசல்ட்டை கொடுத்துள்ளனர். அந்த ரிசல்ட்டை வாங்கிப் பார்த்த சுப்பிரமணியன் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், சுப்பிரமணியனுக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என்று அந்த மருத்துவ பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதை அறிந்த சுப்பிரமணியன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதிகாரிகள் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறியதால்தான், அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து 50,000 வரை செலவு செய்து, மூன்று நாட்களாக கரோனா சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் கரோனா சிகிச்சையில் இருந்த நோயாளிகளுடன் தங்கியிருந்துள்ளார். இது அவருக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டி குடும்பத்தினரையும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்ய வேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுப்பிரமணியன் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கரோனா ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெல்லியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கரோனா சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்று கூறி மருத்துவமனையை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். பிறகு அவருக்கு நோய்த்தொற்று இருக்கிறது என்று கூறி அவரை தேடினார்கள். பிறகு போலீஸ் தனிப்படை அமைத்து கண்டுபிடித்து மீண்டும் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது இப்படி மருத்துவக் குழுவினரின் அலட்சியப் போக்கினால் நோய் தொற்று ஏற்பட்ட நோயாளியை வெளியே அனுப்புவது, நோய்த்தொற்று இல்லாத நோயாளிக்கு நோய் தொற்று உள்ளது என்று அறிவிப்பது என முரண்பாடுகள் நடைபெறுவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.