புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்கோடி கிராமம் ஏம்பல் அதனைச் சுற்றி 55 கிராமங்கள். அத்தனை கிராமங்களுக்கும் மையத்தில் உள்ளது தான் ஏம்பல் கிராமம்.
அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாய பொதுமக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏம்பல் கிராமத்தில் கூடும் சந்தைக்கு வருவார்கள். வீட்டுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் கிராமத்து சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தான் சந்தைக்கு போனா அப்பா, அம்மா மீன், திண்பண்டங்கள் வாங்கி வருவார்கள் என்று ஆவலோடு காத்திருப்பார்கள். இப்படியான ஒரு சந்தை தான் கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
இதனால் அத்தனை கிராம மக்களும் 30 கி.மீ வரை அறந்தாங்கி சென்று பொருள் வாங்கும் நிலை ஏற்பட்டது. இதைப் பார்த்த ஏம்பல் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளை சிறப்படைய செய்ததுடன் நீர்நிலைகளை சீரமைத்துக் கொண்டே வாரச் சந்தையை மீண்டும் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் முதல் அத்தனை அதிகாரிகளையும் பார்த்து பல முறை மனு கொடுத்து சந்தை அமைக்க அனுமதி பெற்றனர்.
கடந்த 15 நாட்களாக சுற்றுவட்டார சந்தைகளுக்கெல்லாம் சென்று வியாபாரிகளிடம் துண்டறிக்கை கொடுத்து வியாபாரிகளுக்கு அழைப்பு கொடுத்ததுடன் சுற்றியுள்ள கிராமங்களில் பல முறை விளம்பரங்கள் செய்து 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (29/09/2019) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதிய பொலிவுடன் சந்தை தொடங்கியது. சந்தைக்கு வந்து மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர்.