தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
'தடுப்பூசி திருவிழா' என்ற பெயரில் கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று (15.04.2021) மட்டும் 179 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக பலர் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனைக்காக வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் கரோனா பரிசோதனை செய்யவந்த இடத்தில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை மறந்து, முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நிற்பது பெரும் வேதனையாக உள்ளதாக கடலூர் மருத்துவமனை டெக்னீஷியன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எவ்வளவுதான் மக்களுக்குச் சொன்னாலும் தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், கரோனா பரிசோதனை செய்யும் இடத்திலேயே கரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.