வழக்கம் போல அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி “பிரதமரும், முதல்வரும் வீட்டிலேயே தனித்திருக்கச் சொல்கிறார்கள். உலகத் தலைவர்களெல்லாம் விலகியிருக்கச் சொல்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா..’ என அரசியல் செய்கிறார்.” என்று கொளுத்திப்போட, விருதுநகர் மாவட்ட திமுக தரப்பில் “ஆற்றாமையால் அமைச்சர் இப்படி பேசுகிறார். ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் அமைச்சர் புலம்புகிறார். ஒன்றிணைவோம் என்ற திட்டத்தின் பெயருக்காக இவ்வளவு பொங்குகிறாரே அமைச்சர்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பங்குகொண்ட அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய நிகழ்ச்சியில், சமூக இடைவெளி என்பதே இல்லாமல் நெருக்கியடித்தார்களே? அங்கு மட்டும் கரோனா மறந்துபோனதா?” என்று திருப்பி கேட்கிறார்கள்.
எதிரெதிர் தரப்பில் இந்த ‘அரசியல்’ சகஜமென்றாலும், சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.வையே கலாய்க்கிறார்கள், விருதுநகர் உ.பி.க்கள். “விருதுநகர் (திமுக) எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனிடம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். “இந்த மாவட்டத்துல இருக்கிற நம்ம கட்சி நாலு எம்.எல்.ஏ.க்கள்ல வசதியான ஆளு நீதாம்பா..” என்று அடிக்கடி சொல்வார். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ.க்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும்போது, சீனிவாசன் எம்.எல்.ஏ.வோ சுண்டுவிரலைக்கூட நீட்டுவதில்லை. கஷ்டப்படும் தொகுதி மக்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமே என்று கட்சி நிர்வாகிகள் சொன்னால், “அதெல்லாம் பணம் வாங்கிட்டுத்தானே ஓட்டு போட்டாங்க. இப்ப உதவி பண்ணுனாலும், அப்புறம் ஓட்டு போடறதுக்கும் பணம் கொடுத்துத்தானே ஆகணும். எதுக்கு தேவையில்லாம கையிருப்பை காலி பண்ணனும்?” என்று யதார்த்தமாகப் பேசி சமாளித்துவிடுகிறார் என்கிறார்கள்.
விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசனை தொடர்புகொண்டோம். அவருடைய ரத்த சொந்தம் ஒருவர்தான் லைனில் வந்தார். “கே.கே.எஸ்.எஸ்.ஆர். யாரைப் பார்த்தாலும் நீதாம்பா பணக்காரன்னு சொல்லுவார். அவரு பேச்சை கணக்குல எடுத்தா எப்படி? எலக்ஷனுக்கு செலவழிச்சதுல ரெண்டு கோடிக்கு மேல சீனிவாசனுக்கு கடனாயிருச்சு. உரக்கடை வச்சிருக்காரு. சின்னதா ஃபைனான்ஸ் பண்ணுறாரு. கரோனா நிவாரணம் வழங்குற அளவுக்கு அவருகிட்ட எங்கேயிருக்கு பணம்? ஒன்றிணைவோம் திட்டத்துல தளபதி கை காட்டுறவங்களுக்கு அரிசிப்பை கொடுத்துக்கிட்டுத்தான் இருக்காரு. பணத்தை வாரியிறைக்கிறதுக்கு இவரு என்ன ஆளும்கட்சி அமைச்சரா? ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வா?” என்று ‘லாப-நஷ்ட’ கணக்கோடு கேட்டார்.
சரிதான்! ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் ‘ரவுண்டு’ கட்டி அடிக்கிறது கரோனா!