கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் ஞானப்பிரகாசம் குளம், நாகச்சேரி குளம், அண்ணா குளம், தில்லையம்மன் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளது. இந்த குளங்கள் அனைத்தும் தண்ணீர் வற்றி வறட்சி பகுதியாக காணப்படுகிறது. குளங்கள் வற்றியுள்ள நிலையில் குளங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சில தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தானாக முன்வந்து அகற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிதம்பரம் நகராட்சி சார்பில் சிதம்பரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்களை தூர்வாரும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தீர்த்த குளமாக கருதப்படும் ஞானப்பிரகாசம் குளத்தை தூர்வாருவதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா தலைமை வகித்தார். இதில் சிதம்பரம் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் என அனைவரும் கலந்துகொண்டு குளங்களை தூர்வாருவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மேலும் குளங்கள் தூர்வாருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். தீட்சிதர்கள் சார்பில் குளம் தூர்வாருவதற்கு முதல்கட்டமாக ரூபாய் 50 ஆயிரம் பணம் கொடுப்பதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து உதவிகளைப் பெறும் வகையில் சிதம்பரம் நகராட்சி சார்பில் தனி வங்கிக் கணக்கு ஒன்று தொடங்க உள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் அவர்களால் முடிந்த பங்களிப்பை செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.