Skip to main content

முறைகேடாகக் கட்டப்படும் ஒருங்கிணைந்த நீதிமன்றம்..! ஊழல் புகாரில் முதல்வரின் உறவினர்.!

Published on 13/09/2018 | Edited on 13/09/2018
TenKasi (2)


"அனைத்து விதிமுறைகளும் அப்பட்டமாக மீறப்பட்டு ஊழலின் ஊற்றுக்கண்ணாக, பொதுப்பணித்துறையின் மேற்பார்வையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தைக் கட்டி வருகின்றது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவு ஒப்பந்த நிறுவனம் ஒன்று. இது கட்டிமுடிக்கப்பட்ட சில நாட்களிலேயே இடிந்து விழுந்தாலும் ஆச்சர்யமில்லை என நீதிமன்றத்தை நாடியுள்ளார் நெல்லை மாவட்டம் தென்காசியினை சேர்ந்த ஒருவர்.
 

TenKasi (2)


தென்காசி சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என வெவ்வெறு இடங்களில் இயங்கி வந்த இவைகளை ஓரே வளாகத்தில் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் என்பது தென்காசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுள் ஒன்று. மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த அரசு ரூ.12.14 கோடியில் வாய்க்கால் பாலத்திற்கு அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பொதுப்பணித்துறையினரின் மேற்பார்வையில் கட்டி முடிக்க உத்தரவிட்டது. இதற்கான பணி டெண்டர் விடப்பட முதல்வரின் உறவு நிறுவனமான ஈரோட்டை சேர்ந்த "லோட்டஸ் கன்ஸ்ட்ரக்சன்" ஒப்பந்தததை கைப்பற்றி வேலையை ஆரம்பித்தது. இங்கு தான் பிரச்சனையே..?
 

TenKasi (2)


தவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஆதாரத்தை திரட்டி, நீதிமன்றத்தை நாடியுள்ள சி.பி.எம்.கட்சியின் உறுப்பினரான கீழமுத்தாரம்மன் தெருவினை சேர்ந்த தாணுமூர்த்தியோ., " பணி துவக்கப்பட்ட நாட்களில் இருந்தே விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறி வருகிறது இந்த ஒப்பந்த நிறுவனம். கட்டிடம் கட்ட தேவையான தண்ணீருக்கு முறையான வழிமுறை செய்யாமல் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

TenKasi (2)


இப்பொழுது தான் பெயருக்கே போர் போட்டு வைத்துள்ளனர். இதையெல்லாம் செய்த பிறகு தான் வேலையையே துவக்க வேண்டும். அது போக, அங்கிருக்கும் பழைய மருத்துவமனையை இடிக்கவேண்டுமென்பது ஒப்பந்தம். இன்னும் அந்த மருத்துவமனை முழுவதுமாக இடிக்கப்படவில்லை. பில்லர் அமைக்க தோண்டப்பட்ட குழி தேவைக்கும் அதிகமாக (கிணறு போல) தோண்டி காலம்பாக்ஸ் முறையாக அமைக்கப் படவில்லை..இதைவிட வேடிக்கை., கட்டித்திற்க்கான கலவைகள் அனைத்தும் பணிநடக்கும் இடத்திலேயே இடவேண்டும் ஆனால் அருகில் உள்ள சிவராமபேட்டை தாமிரபரணி காண்கிரீட் என்ற தனியாரிடமிருந்து லாரிகள் மூலம் கொண்டுவந்து காண்கீரீட் கலவைகள் கொண்டு வரப்படுகிறது. இதனால் முறைகேடுகளும், ஊழல்களும் தான் நடக்கும். அனைத்து வேலைகளையும் அஜாக்கிரதையாக நடப்பதால் இந்தக் கட்டிடம் தாங்குமா..? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அது போக, முதல்வரின் உறவினர் இதனின் ஒப்பந்தக்காரர் என்பதால் தட்டிக்கேட்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அமைதிக்காக்கின்றனர். இதையெல்லாம் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் திரட்டி நீதிமன்றத்திற்கு சென்றிருக்கின்றேன்." என்றார் அவர்.

இதே போல் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடம் விரிசல் விழுந்தது போல் நடக்காமல் அதிகாரிகள் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்களா..? என்பது தான் தற்பொழுதைய கேள்வியே..?

 

சார்ந்த செய்திகள்