வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரவேல் மற்றும் பெருமாள். இவர்களின் இருவரது வீடும் ஒரே தெருவில் அடுத்தடுத்து உள்ளது. இந்த இரு வீட்டாருக்கும் இடையே வீட்டின் அருகே சுத்தம் செய்வதில் நீண்ட காலமாக சண்டை இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெருமாள் குடும்பத்துக்கும், குமரவேல் குடும்பத்துக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இந்த சண்டை கைகலப்பாக ஒருக்கட்டத்தில் மாறியுள்ளது. இந்த மோதலில் பெருமாள் குடும்பத்தினர் குமரவேல் குடும்பத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்த குமரவேல் ஆந்திர மாநிலம் குப்பம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது தொடர்பாக அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர் குமரவேல் குடும்பத்தினர். போலிஸார் பணம் வாங்கிக்கொண்டு பெருமாள் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டுள்ளனர்.
இந்நிலையில் மே 26ந்தேதி இரவு குமரவேல் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளனர். இறந்து போன குமரவேல் உடலை திம்பேரி கூட்டு சாலையில் வைத்து இறந்துபோன உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரவேல் இறப்புக்குக் காரணமாக இருந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் வலியுறுத்தினர்.
போராட்டம் நடைபெற்றுக்கொண்டியிருக்கும்போது இறந்துப்போன குமரவேல் மனைவி மற்றும் மகள் இருவரும் தங்கள் மீது மண்ணெண்ணய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்வோம் என்றனர். அதற்குள் அங்கு வந்த போலிஸார், அவர்களிடம் பேசி சமாதானம் செய்து, விசாரித்து உடனே கைது செய்கிறோம் என வாக்குறுதி தந்ததன் அடிப்படையில் 2 மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. உடலை எடுத்துக்கொண்டு உறவினர்கள் வீட்டு சென்று பின்னர் இடுக்காட்டில் அடக்கம் செய்தனர்.