
விழுப்புரம் மாவட்டம் வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (36). இவர் செங்கல் சூளையில் வேலை செய்துவருகிறார். இவர் தன்னைப் போல் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக வெளியூர் சென்று ஆட்களை அழைத்து வருவதற்கும் அவர்களின் குடும்ப செலவுகளுக்குப் பணம் கொடுப்பதற்காகவும் செங்கல் சூளை உரிமையாளரிடம் இருந்து ஒன்னேகால் லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருக்கோவிலூர் பகுதிக்குச் செல்ல கிளம்பியுள்ளார். அப்போது விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தவர் திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார்.
அப்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. அவர் சட்டை பாக்கெட் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது. பாக்கெட்டைக் கிழித்து யாரோ பணத்தை எடுத்துக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக விழுப்புரம் போலீசாருக்குத் தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதேநேரம் போலீசார் நகரப் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுக்கா சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயது நாகேந்திரன் என்பவர் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்தனர். அவரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர் முரண்பாடாக பதிலளித்தார்.
அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில் புதிய பேருந்து நிலையத்தில் புஷ்பராஜிடமிருந்து ஒன்னேகால் லட்சம் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்த பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். அதேபோல், அன்றே இன்னொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த விஜயன் என்பவரது மனைவி ரம்யா (30), விழுப்புரம் அருகில் உள்ள உறவினர் ஊருக்குச் செல்வதற்காக காத்திருந்த போது அவரது கைப்பையை ப்ளேடால் அறுத்து அதிலிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான நகை அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரம்யா, கதறி அழுதுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்யாவிடம் விசாரணை செய்தனர். மேலும், பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ரம்யாவிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அதேபோல், கண்டாச்சிபுரம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் உமா சங்கர். இவர் திருக்கோவிலூர் சாலையின் எதிரில் கடந்த 3 ஆண்டுகளாக செல்ஃபோன் கடை வைத்து நடத்திவருகிறார்.
நேற்று முன்தினம் (12.12.2021) இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் கடைக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தபோது, கடையிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு செல்ஃபோன்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அதைப் பதிவு செய்யும் இயந்திரம் ஆகியவற்றையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து செல்ஃபோன் கடையில் பூட்டை உடைத்துத் திருடிய நபர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர். இப்படி ஒரேநாளில் விழுப்புரம் மாவட்டத்தில் இரவு பகல் பாராமல் கொள்ளையர்களின் அட்டகாசம் நடந்தது மாவட்ட மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.