கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் தொகுதிக்கான வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று (19.04.2021) மாலை கல்லூரிக்குச் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் முன்பு வெகு நேரமாக கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த அரசியல் கட்சியினர் அங்கு குவிய தொடங்கினர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில், திருப்பூரிலிருந்து சென்னைக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி என்றும், லாரி ஓட்டுநர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் என்பதால், வீட்டிற்கு செல்வதற்காக லாரியை நிறுத்தியதாக தெரிவித்தனர். பின்னர் காவல்துறை அறிவுறுத்தலின் பேரில், கண்டெய்னர் லாரியை ஓட்டுநர் அங்கிருந்து எடுத்துச் சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.