வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு கிராமம் வழியாக சென்னை - பெங்களுரூ தேசிய 6 வழிச்சாலை செல்கிறது. இந்த பகுதியில் பல சாலையோர உணவு விடுதிகள் உள்ளன. இதனால் சாலையோரம் லாரி, கண்டெய்னர் லாரிகள் போன்றவை நிறுத்திவிட்டு வாகன ஓட்டுநர்கள் உணவு சாப்பிடுவது, டீ குடிப்பது போன்றவை வழக்கம்.
அதன்படி ஆகஸ்ட் 21ந்தேதி காலை சென்னையில் இருந்து பெங்களுரூ நோக்கி சென்ற ஒரு கண்டெய்னர் லாரி பூட்டுத்தாக்கு கிராமத்தின் அருகே நிறுத்திவிட்டு உணவு சாப்பிட ஓட்டுநரும், உதவியாளரும் சென்றுள்ளனர். சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தபோது நிறுத்திவைக்கப்பட்டுயிருந்த கண்டெய்னர் லாரி காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியாகி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் உடனடியாக போலிஸார் சோதனையை தொடங்கினர். இரத்தினகிரி போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் கடத்தப்பட்ட கண்டெய்னரை மடக்கி பிடித்து விசாரித்தனர். திருடி வருவது தெரிந்து அந்த கண்டெய்னரில் வந்தவர்களை கைது செய்தனர்.
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ், ஹனின், காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த பார்த்திபன், வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த லோக்கேஷ் மற்றும் அசோக்குமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னால் இன்னும் வேறுசிலர் உள்ளார்கள் என தெரியவந்ததால் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.