மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வட்டார சேவை மையத்தில் இயங்கிவருகிறது. அந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை எதுவுமே இல்லாததால் மாணவர்கள் அவ்வப்போது அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி போராட்டம் நடத்திவருகின்றனர். அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்தநிலையில், கடந்த வாரம் மீண்டும் கல்லூரி மாணவர்களும், இந்திய மாணவர் சங்கத்தினரும் சாலை மறியல் போராட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் தரக்குறைவாக பேசியதாகவும், மாணவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதேநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாணவர்களை இடை நீக்கம் செய்யப்பட்டதோடு, கல்லூரிக்கு 14ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மாணவர்களை மிரட்டி, அவதூறாக பேசிய கல்லூரி முதல்வர் விஜயேந்திரனை பணிநீக்கம் செய்யக்கோரியும், கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரியம், தற்போது வட்டார சேவை மையத்தில் இயங்கி வரும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குத்தாலம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.