வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என இந்தியத் தலைநகரான டெல்லியை, பஞ்சாப் - ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுத் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். உலகமே உற்று நோக்கும் இப்போராட்டத்தை முறியடிக்க இந்தியாவை ஆளும் பா.ஜ.க அரசு, பல்வேறு பணிகளைச் செய்கிறது. அதனையும் மீறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, தமிழகத்தில் விவசாயத்தை நசுக்கும், கார்ப்பரேட்களுக்கு சாதகமான, குறிப்பிட்ட 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், விவசாயச் சங்கங்கள் போராட்டம் நடத்தின. கரோனாவால் அது தொடர்ந்து நடைபெறவில்லை. இந்நிலையில், டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிவரும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனவும் டிசம்பர் 5 -ஆம் தேதி தமிழகத்தில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 5 -ஆம் தேதி தமிழகத்தின் அனைத்துத் தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா சிலை முன்பு, தெற்கு மா.செ எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்தச் சட்டத்தை இயற்றிய பா.ஜ.க மற்றும் வாக்கெடுப்பில் ஆதரவளித்த அ.தி.மு.க.வுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி பேசும்போது, “மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசாங்கம் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் நமது விவசாயிகளை அழிக்கும் சட்டமாகும். இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறக் காரணமே தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசும், அதன் கூட்டணிக் கட்சியும்தான். அ.தி.மு.க.வின் ஒரு மக்களவை எம்.பி, மாநிலங்களவை எம்.பிக்கள் இரு அவைகளிலும் அதனை ஆதரித்து வாக்களித்தார்கள். அவர்களின் வாக்கே இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறக் காரணமாகியது.
இந்தச் சட்டம் மசோதாவாக இருக்கும்போது தி.மு.க எதிர்த்தது. பல மாநிலங்களும் இதனை எதிர்த்தனர். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பஞ்சாப், ஹரியான விவசாயிகள் லட்சக் கணக்கானோர் டெல்லிக்கு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு நமது ஆதரவை தெரிவிக்கவும், தொடர்ச்சியாக விவசாயிகளுக்காக நாம் போராடவே, மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நாம் போராட்டம் நடத்துகிறோம். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை இந்தப் போராட்டம் நடக்கும்” என்றார் பொன்முடி.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்