சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளைப் போற்றுகின்ற வகையில், சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை. அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.