பவானியில் மேலும் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரளா:
தமிழக அரசு மீது கார்த்திக் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
பதவி போட்டியில் மக்களை பற்றி தமிழக அரசு கவலைப்படாததால், பவானி ஆற்றின் குறுக்கே 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டிய கேரள அரசு மீதமுள்ள 4 இடங்களில் கட்டுமான பணிகளை துவக்கி இருப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி, பாடவயல், சீரக்கடவு, உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பகுதிகளில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரின் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய நிலையிலும், தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் தடுப்பணைகள் கட்டப்பட்ட பகுதிகளில் திமுக சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் நா. கார்த்திக் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், தலா 1 கோடி மதிப்பீட்டில் தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். இதனை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்ததாலும், உச்ச நீதிமன்றத்தில் முறையாக வழக்கு நடத்ததாலும் இரண்டு இடங்களில் தடுப்பணை பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும், மீதமுள்ள 4 இடங்களில் கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கேரள அரசு தடுப்பணைகள் உயரத்தை அதிகரிக்கும் வகையில் கட்டுமான பணிகள் நடந்து இருப்பதாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், 20 இலட்சம் மக்கள் பயன்பெறும் கோவை நகரின் குடிநீர் ஆதரமான பில்லூர் அணை இரண்டு குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 18 குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் கார்த்திக் தெரிவித்தார். பதவி போட்டியில் மக்களை பற்றி தமிழக அரசு கவலைப்படுவதில்லை என குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசு உடனடியாக தலையீட்டு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினார். இக்கோரிக்கையை வலியுறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சிகள், விவசாயிகள் அமைப்புகளை இணைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
- அருள்