திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி முத்தம்பட்டியில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய பாலத்திற்கான பூமி பூஜை மற்றும் ரூ. 27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பூமி பூஜையை துவக்கி வைத்துவிட்டு ஊராட்சி மன்றக் கட்டடத்தை துவக்கி வைத்துவிட்டு பொதுமக்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “30 ஆண்டுகளாக சகோதரனை போல வரவேற்கும் ஊராட்சியாக நமது தொப்பம்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள அனைத்து சமுதாய மக்களும் என் மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளார்கள். மேலும் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் கருப்பையா சிறு வயது என்றாலும் மக்களுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார்.
இந்த ஊராட்சிக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் நூறு சதவிகிதம் செயல்படுத்த தயாராக உள்ளேன். அது பாலமாக இருந்தாலும் சரி, நாடக மேடையாக இருந்தாலும் சரி, தார்ச் சாலையாக இருந்தாலும் சரி உடனடியாக பொதுமக்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேற்றிக் கொடுக்கப்படும். இப்போது மயானத்திற்கு பாதை வேண்டும் என்றும், நாடக மேடை வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள்.
இதே இடத்தில் அதற்கான நிதியை நான் ஒதுக்கீடு செய்கிறேன். காரணம் மக்களுக்கான நலத்திட்டங்களை தங்கள் இல்லம் தேடிக் கொண்டு செல்லும் ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான மக்கள் ஆட்சி நடக்கிறது” என்று கூறினார்.