கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த பொழுது தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த பொழுது பச்சகுப்பம் ரயில் நிலையம் அருகே வீரவர்கோயில் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் மற்றும் கான்கிரீட் கலவையால் ஆன சிமெண்ட் கல் போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 3.45 மணிக்கு அந்த இடத்தை ரயில் கடந்தபோது தண்டவாளத்தில் கற்குவியல் இருந்ததை ரயில் ஓட்டுநர் அறிந்தார். ஆனால் இருப்பினும் ரயிலை உடனடியாக நிறுத்த முடியாததால் வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பாறாங்கற்கள் மீது மோதியது. இதில் கற்கள் தூக்கி வீசப்பட்டது.
கான்கிரீட் கற்கள் மீது ரயில் சக்கரங்கள் ஏறியது. தொடர்ந்து அடுத்தடுத்த பெட்டிகள் கற்கள் மீது ஏறியதால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால் தூக்க கலக்கத்திலிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர் .தொடர்ந்து பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ஆம்பூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்தில் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் இளவரசி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பநாய் உதவியுடன் பச்சகுப்பம் பகுதியில் சோதனை நடத்தினர். ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.