Skip to main content

கலைஞரிடம் கற்றுக்கொண்ட ஸ்டாலின்! - வீரப்பமொய்லி பெருமிதம்!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

congress party senior leader veerappa moily press meet

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசிக்கு இன்று (26/03/2021) வந்திருந்த கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளருமான வீரப்பமொய்லி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, “மோடி தலைமையிலான அரசாங்கத்தால், பல இன்னல்களைப் பட்டாசுத் தொழில் சந்தித்து வருகிறது. பட்டாசு ஏற்றுமதி செய்யவும், தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் தடை உள்ளதால், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில், பட்டாசு உற்பத்தியில் ரூபாய் 20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. தவறான கொள்கையின் காரணமாக 12 கோடி பேர் வேலை வாய்ப்பினை இழந்திருக்கின்றனர். உள்நாட்டு உற்பத்தியும் குறைந்து பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். தமிழர்களின் அபாயமாக பா.ஜ.க. உள்ளது. பல்வேறு தரப்பினர் விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு ஆதரித்தது. இதன்மூலம், பா.ஜ.க. கட்டுப்பாட்டில் அதிமுக பயந்துபோய் இருப்பது தெளிவாகிறது. ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லை. இவர்கள், நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு எதிராக வெறிகொண்டு இருக்கின்றனர். வேலை வாய்ப்பு வழங்குவதில், இந்த அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. சிறுகுறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. 

 

ஸ்டாலின் சிறந்த நிர்வாகி. அவரது தந்தையிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டுள்ளார். நிச்சயம் அவரது ஆட்சி அமையும். சேலத்திற்கு வரும் மார்ச் 28- ஆம் தேதி ராகுல்காந்தி வருகிறார். பிரியங்கா காந்தி தமிழகம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்