![congress party leader jothi Mani MP supports jai bhim crew!](http://image.nakkheeran.in/cdn/farfuture/pGxfvSlByzzoDB21SamkTINly4Agghllw-RBiVvy4Mk/1636990338/sites/default/files/inline-images/jothiman444433333.jpg)
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த நவம்பர் 2- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், இத்திரைப்படத்தைப் பார்த்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் படக்குழுவினருக்கு பாராட்டுகளையும், ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
‘ஜெய்பீம்’ படத்தில் பழங்குடி மக்களை சித்திரவதைப்படுத்தும் காவல்துறை அதிகாரி குருமூர்த்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஒரு காட்சியில் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் காலண்டர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பினர். அதன் பின் ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சியில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், ‘ஜெய் பீம்’ படம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கொண்ட கடிதம் எழுதினார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாகப் பதிலளித்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக அநீதியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆட்சியாளர் உள்ளிட்ட பலரையும் செயல்பட தூண்டியிருப்பதில் உள்ளது அதன் மாபெரும் வெற்றி.
ஒரு கலைப்படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்கிற விதியை யாரும் வகுக்க முடியாது. அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். என்றபோதிலும் அதை கையாள்வதற்கு அரசு அமைப்புகளும் உள்ளன. தனிநபரோ,அமைப்புகளோ,அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது. அச்சுறுத்தவும் கூடாது.
ஒரு கலைப்படைப்பின் நோக்கம் காட்சிப்படுத்துதலே. அதை தாண்டியும் ஒரு படைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது மகத்தான படைப்பாக மாறுகிறது. கொண்டாடப்படுகிறது. இப்படியொரு படைப்பை உருவாக்கியவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள். அவர்களை அச்சுறுத்துவது ஆபத்தானது.இதை தமிழக அரசு அனுமதிக்ககூடாது.
அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் தங்கள் எல்லைகளையும்,பொறுப்புகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையிலிருந்து வெளியில் வர வேண்டும். இன்றைய சமூகம் நம்மிடமிருந்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பையே எதிர்பார்க்கிறது.
அரசியலின் பெயரால் இம்மாதிரியான அச்சுறுத்தல்களில் ஈடுபடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. சூர்யாவை அச்சுறுத்துவதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கலை படைப்புகளை ஒரு சமூகமாக நாம் திறந்தமனதோடு எதிர்கொள்ள வேண்டும். நல்ல படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். இந்த நேரத்தில் சூர்யா மற்றும் 'ஜெய்பீம்' படக்குழுவினரோடு நிற்பது நமது கடமை" எனத் தெரிவித்துள்ளார்.