Skip to main content

பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

பேரறிவாளன் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏழு பேர் விடுதலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில் குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்' என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரவர்களது இடங்களில் வாயை வெள்ளை துணியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயினை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சுமார் 200 மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் காங்கிரஸ் கட்சியினர் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சார்ந்த செய்திகள்