![congress leader rahul gandhi arrives tamilnadu in election campaign](http://image.nakkheeran.in/cdn/farfuture/gb2PhqBnmWmLjhJSSuvyJ0lHyBpkt_eFHmaYj1bR9No/1616606462/sites/default/files/inline-images/rahul121.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 06- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த், அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்களும் அடுத்தடுத்து வரும் நாட்களில் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரச்சாரம் கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளனர். அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மார்ச் 28- ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். அன்றைய தினம், சென்னையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிக்கிறார். அதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாலை 4 மணிக்கு நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர்மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.