திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு தரப்பு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் பேருந்தில் செல்லும் பொழுது உட்காருவதற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் இரு குழுக்களாக மோதிக் கொண்டனர். மாணவர்கள் பொது இடத்தில் மோதிக்கொள்வது தொடர்பான தகவல் போலீசாருக்கு கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தினர். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 8000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த அரசு கலைக் கல்லூரியில் படித்து வருவதால், கல்லூரி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இடம் பிடிப்பதில் மோதிக்கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.