கரோனா இரண்டாவது அலை கையை தமிழகத்தில்மீறிச் செல்லவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு கையை மீறிச் செல்லவில்லை. அரசு தலைமை வழக்கறிஞர் இந்திய அளவிலான கரோனா பாதிப்பைக் குறிப்பிட்டார். உயர்நீதிமன்றத்தில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஆலோசனை மேற்கொண்டேன்.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 12,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம். நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கபசுர குடிநீருக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பில்லை. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள எந்த ஆட்சேபனையும் இல்லை.
உலகளவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று வந்திருக்கிறது. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் 83 ஆயிரத்து 316 படுக்கைகள் உள்ளது. அடுத்த 10 நாட்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் படுக்கைகளாக உயர்த்தப்படும்" இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.