செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்வில் கர்ப்பிணி தாய்மார்களுக்குப் பாரம்பரியமிக்க பூங்கார் அரிசி வழங்கப்பட்டது.
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. தாய்ப்பால் வார விழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார நிலையம் மற்றும் செட்டிகுளம் லயன்ஸ் கிளப் இணைந்து தாய்ப்பால் வார விழா நடத்தினர்.
இந்நிகழ்வில் மருத்துவர் சூர்யா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆலத்தூர் வட்டார மருத்துவர் மகாலட்சுமி, தாய்ப்பால் அவசியம் குறித்தும் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய அருமருந்து என்றும், ஆரோக்கியமான குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் அவசியம் என்றும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து தாய்ப்பால் வார விழா உறுதி மொழி ஏற்பும், விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மின்விசிறியும் வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப் சார்பாக சுகப்பிரசவம் ஆவதற்கும், தாய்ப்பால் ஊறக் கூடுவதற்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்குப் பாரம்பரியமிக்க பூங்கார் அரிசி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் செட்டிகுளம் லயன்ஸ் கிளப் தலைவர் தங்கராசு, செயலாளர் விஜய்அரவிந்த், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, அசோக்குமார், செல்லப்பன், செந்தில்குமார், சத்தியன், சங்கர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.