Skip to main content

சேலத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்; பழைய கறி 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

சேலத்தில் கெட்டுப்போன, பழைய ஆட்டிறைச்சியை 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுவது, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது.


ஆட்டிறைச்சி தற்போது கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சேலம் சூரமங்கலம், சித்தனூர், கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆட்டிறைச்சி கிலோ 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் கதிரவனுக்கு தகவல் கிடைத்தது. 

 Confiscation of spoiled mutton fssai officers raid in salem district

இதையடுத்து அவர் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை 07.00 மணியளவில், புகாருக்குள்ளான இறைச்சிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் பார்த்திபனும் சோதனையில் ஈடுபட்டார். வெளியூர்களில் இருந்து பழைய இறைச்சியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தும், சிலர் கெட்டுப்போன இறைச்சியையும் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. 


இந்த சோதனையில், பழைய மற்றும் கெட்டுப்போன ஆட்டிறைச்சி 245 கிலோ பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது. சில கடைகளில் அறுப்புக்காக வைத்திருந்த நோய்வாய்ப்பட்ட ஆடுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உணவுப்பாதுகாப்பு உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 35 இறைச்சி கடைகளுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப்பட்டது.


விரைவில், சேலம் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளிலும் இதுபோன்ற அதிரடி சோதனைகள் நடத்தப்படும் என்று உணவுப்பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்