மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 56 வயது மனோஜ் சஹானி என்பவரும் 36 வயதான சரஸ்வதி வைத்தியா என்பவரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டூகெதரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், நயா நகர் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, அதனடிப்படையில் விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்றனர். அங்கு தரையில் பிளாஸ்டிக் பைகளிலும் போர்வையிலும் சுற்றப்பட்ட உடல் பாகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவை அனைத்தையும் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த உடல் சரஸ்வதி வைத்தியாவுடையது என்று உறுதி செய்த போலீசார், அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதையும், அதில் சில பாகங்களை குக்கரில் வேக வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இதனிடையே மனோஜ் சஹானி தலைமறைவானார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு எந்த தகவல் கிடைத்தாலும் தெரிவிக்கும்படியும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மனோஜ் சஹானி, மீரா பயந்தரில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றியுள்ளார். அப்போது கடைக்கு வந்த சரஸ்வதி வைத்தியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆதரவற்றவர்கள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். அதன்பிறகு கோயிலில் திருமணம் செய்து கொண்ட சரஸ்வதி வைத்தியாவும் மனோஜ் சஹானியும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் துவங்கினர்.
இருவருக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால், மனோஜ் தனது தாய் மாமா என்றே அக்கம் பக்கத்தினரிடம சரஸ்வதி கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசிடம் இருந்து தப்பிக்கவே சடலத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினேன். எனக்கு சரஸ்வதி மகள் மாதிரி எனவும், கணவன் மனைவியாக வாழவில்லை என மனோஜ் போலீஸிடம் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் வழக்கின் போக்கை மாற்றத்தான் இப்படி மாற்றி மாற்றிப் பேசுகிறாரோ என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.