திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார்.
ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.