உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், பிரபல சட்ட நிபுணருமான ஃபாலி நாரிமன் (95) காலமானார். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகவும், சர்வதேச வர்த்தகத் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிந்து வந்த ஃபாலி நாரிமன், பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக அறியப்பட்ட ஃபாலி நாரிமன், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜராகி பல வருடங்களாக வாதாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு, 22 நாட்கள் சிறையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதன்பின் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அந்த ஜாமீன் தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். அந்த விசாரணையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு, ஃபாலி நாரிமனின் வாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. மேலும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு, போபால் விஷவாயு பேரழிவு வழக்கு போன்ற பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு, பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, தமிழக முதல்வர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட நிபுணரும், இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஃபாலி நாரிமன் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். 70 ஆண்டுகளாக பார்கவுன்சிலிலும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றிய அவரது அனுபவம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. அவர் பல முக்கிய தீர்ப்புகளுக்கு கருவியாக இருந்துள்ளார். நீதித்துறையில் அவர் செய்த பங்களிப்புகள் பல தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பார் கவுன்சிலில் உள்ள சக ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.