சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் அனுப்பிய கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் சேலம் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவினாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு மதுரை தல்லாகுளம் போலீசார் தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.