நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. அதில் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி ஆதரவைத் திரட்டி வருகின்றனர். இதற்கிடையே, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு எனப் பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.
அதே வேளையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்கத் தபால் மூலம் அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் தனிச் செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவருடைய அட்டையை காணாமல் போய்விட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.