தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், கடந்த மார்ச் 4- ஆம் தேதி அன்று நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர்களைத் தேர்வு செய்தனர். ஆளும் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான இடங்கள் மற்றும் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடங்களில் தி.மு.க. கவுன்சிலர்களே போட்டி வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இது குறித்து கூட்டணிக் கட்சித் தலைமைகள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் செய்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர், துணைத்தலைவர்கள் உடனே ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் தமிழ்செல்வன் போட்டியிட்டு 15- க்கு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முத்தமிழ்செல்வி 4 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
இந்த நிலையில் கட்சித் தலைவர் அறிவிப்பைத் தொடர்ந்து கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவராக வெற்றி பெற்ற தமிழ்செல்வன் கடந்த மார்ச் 8- ஆம் தேதி அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று (26/03/2022) நடந்த தேர்தலில் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன் தேர்தல் நடத்தும் அலுவலராக வேட்பு மனு பெற்றார். முத்தமிழ்செல்வி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.