தமிழகத்தை தண்ணீர் பஞ்சம் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் வேலையில் கம்யூனிஸ் கட்சியினர் திருமண நிகழ்வில் மணமக்களுக்கு குடிநீர் கேனை பரிசாக வழங்கியது பலரையும் பேசவைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் பருவமழையின் அளவு சராசரியைவிட பலமடங்கு குறைந்து பெய்தது. அதோடு பெய்த மழை நீரையும் சேகரிக்க தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் கலக்கசெய்ததால் தற்போது தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் தள்ளாடி வருகிறது.
தண்ணீர் பஞ்சத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பிழைப்புத்தேடி சென்றவர்கள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கே திரும்பும் நிலை ஏற்பட்டுவிட்டது. பலர் தாங்கள் குடியிருந்த வீடுகளை காலி செய்யும் நிலையும் ஏற்பட்டுவிட்டது. தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டதாலும், சில தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும் மக்கள் வேலையிழந்து வீடுதிரும்புகின்றனர். ஓட்டல்களுக்கு தண்ணீர் இல்லாமல் பல ஓட்டல்கள் மூடிவிட்டனர். பல குடியிருப்புகளில் உணவு சமைக்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக நாள் கணக்கில் செலவழிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருவதை மாநில அரசு கண்டும் காணாமலும் இருந்து வருகிறது. குடிநீருக்காக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றும் அரசு செவிசாய்த்த பாடில்லை. இந்த நிலையில் இதனை அரசுக்கு உணர்த்தும் வகையில் நேற்று திருவாரூர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் திருஞானம் இல்லத் திருமண விழாவில் மணமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். சார்பில் குடிநீர் கேன்களை பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து ஐ,வி, நாகரஜான் கூறுகையில்," மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை தமிழக அரசு கண்டும் காணாமல் இருந்துவருகிறது. இதற்காக மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்தை தமிழக அரசுக்கு உணர்த்தும் வகையில் மணமக்களுக்கு குடிநீர் கேனை வழங்கினோம்," என்றார்.