![Commissioner signed in the palm of his hand asking for contract money](http://image.nakkheeran.in/cdn/farfuture/4b2QRo5Dc_EO0N31jbPIIUiL2re0afI4v5M0r403rnE/1631103169/sites/default/files/inline-images/tiruvannamalai-sign-1.jpg)
திருவண்ணாமலை நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசின் சார்பில் வீடுகட்டும் ஒப்பந்தத்தை குயிலம் செல்வராஜ் என்பவர் எடுத்துள்ளார். 2017-2018 ஆம் ஆண்டு செய்ய வேண்டிய வேலையை அதற்கடுத்த ஆண்டுகளில் செய்துள்ளார். கரோனா பரவலால் அந்த பணி முடியத் தாமதமாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த குடியிருப்புகளைத் திறக்க வேண்டுமென அவசர அவசரமாகத் திறந்துவைத்துள்ளார். அந்த வீடுகள் கட்டியதற்கான பில் 90 லட்சம் ரூபாய் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் குயிலம் செல்வராஜ் உள்ளங்கையில் பச்சை மை பேனாவில் கையெழுத்து அடங்கிய புகைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
செய்த வேலைக்கான பில் தொகையைக் கேட்டு திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக உள்ள சந்திராவைச் சந்தித்துக் கேட்டபோது, கையில் கையெழுத்திட்டுப் போய் வாங்கிக்கோ என அலட்சியமாக, திமிராக நடந்துகொண்டார் எனத் தகவல்கள் பரவியது. இதுமட்டுமல்ல அலுவலக அதிகாரிகளை, பணியாளர்களை, ஊழியர்களைக் கடுமையான வார்த்தைகளில் பேசுகிறார். அலுவலக கோப்புகளில் உடனே கையெழுத்திடுவதில்லை. எதற்கெடுத்தாலும் ஒரு அறைக்குள் சென்று கடவுளிடம் உத்தரவு கேட்கிறேன் எனக் கதவை அடைத்துக்கொள்கிறார். பின்னர் வந்து நாளைக்குப் போடுகிறேன் என்கிறார். ராகுகாலம், எமகண்டம், நல்ல நேரம் பார்க்கிறார் எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.
![Commissioner signed in the palm of his hand asking for contract money](http://image.nakkheeran.in/cdn/farfuture/5z0zTy2PsG8YyQfR9-XR9DywFj2NI6BwF7TNerZQ5VI/1631103202/sites/default/files/inline-images/tiruvannamalai-sign.jpg)
இது குறித்து நகராட்சி ஆணையர் சந்திராவிடம் நாம் கேட்டபோது, “தொடர்ச்சியாக வந்து நான் செய்த வேலைக்கு பணம் தாருங்கள் எனக்கேட்டார். அதற்கான கோப்புகள் இல்லாமல் எப்படி கையெழுத்திட முடியும். அந்த கோப்புகளை பொறியாளர் துறை தான் எனக்கு அனுப்பவேண்டும், அவர்கள் அனுப்பவில்லை. பொறியாளரை பார்க்கச்சொன்னேன், அவர் அதனை புரிந்துக்கொள்ளவில்லை. அதன்பின் பொறியாளரிடம் கூறி கோப்புகளை தயார் செய்ய வைத்தால், அதிலும் குளறுபடி. அந்த பெரியவரோ நீங்க கையெழுத்து போடுங்க, நான் பணம் வாங்கிக்கறன் என வற்புறுத்தினார். கோப்புகள்ள பார்த்து அது சரியாக இருந்தால் தான் செக் தரமுடியும், சும்மா வெற்று பேப்பர்களில் கையெழுத்து போட்டால் செல்லாது.
நீங்க கேட்கற தொகைக்கு அப்படியே செக் தரமுடியாது, வேலை முடிந்து இத்தனை மாதங்கள் கடந்தபின் இப்போது பணம் தரக்காரணம் என்னவென கேள்வி எழும், அதனால் கோப்பு ரெடியாகி அதற்கான காரணங்களை எழுதி பின்னர் செக் தருகிறேன் என்றதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கையெழுத்து மட்டும் போதும் என்றார், விளையாட்டாக இந்தாங்க என அவரின் கையில் கையெழுத்துப் போட்டேன், இதை அவர் பெரியதாக்கிவிட்டார் என்றவர் கடவுளிடம் வேண்டுவது என் தனிப்பட்ட உரிமை. நான் அதனை அலுவலக பணியில் காட்டுவதில்லை. அலுவலக வேலை தெரியாதவர்களிடம், கோப்புகளைச் சரியாகப் பராமரிக்காதவர்களிடம் கோபமாகப் பேசியிருக்கலாம், அநாகரிமாகப் பேசும் நபர் நானில்லை, பேசியதும் கிடையாது என மறுத்தவர். இங்கு எனக்கு எதிராக யாரோ செயல்படுகிறார்கள், அது யாரெனத் தெரிந்தால் அவர்களிடம் நான் செய்த தவறுயென்ன எனக்கேட்டு தெரிந்துகொண்டு திருத்திக்கொள்வேன்” என்றார்.