கள்ளக்குறிச்சி மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் - சுமதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுமதியின் கணவர் 14 ஆண்டுகளுக்கு முன்னரே வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், தனது மகன் மற்றும் மகளுடன் கூரைவீட்டில் சுமதி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு அரசு ஒரு வீடு கட்டித் தர வேண்டும் என்று சுமதி கோரிக்கை வைத்துள்ளார். அதில், “நாங்கள் கூரை வீட்டில் வசித்து வருகிறோம். ஆனால் கூரை வீடோ சிறியதாக உள்ளது. உள்ளே செல்வதற்குக் கூட குனிந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தக் கூரை வீடு தாழ்வான பகுதி உள்ளதால் மழைக்காலங்களில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்து விஷப் பூச்சிகள் மற்றும் பாம்புகள் உள்ளே நுழைவதால் பயத்துடன் வாழ்ந்து வருகிறோம். எனது மகன் அகிலன் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் இந்தக் கூரை வீட்டில் சரியா படிக்க மாட்டான் என்று பள்ளி விடுதியிலேயே தங்க வைத்துப் படிப்பைத் தொடர வைத்துள்ளேன். எனது மகள் அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். இந்தக் கூரை வீட்டில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி கூட இல்லாததாலும் அரசு கல்லூரி விடுதிலேயே தங்கிப் பயின்று வருகிறார்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
சுமதி மகள் ஐஸ்வர்யா, “கழிப்பறை வசதி இல்லாததால் அருகில் உள்ள வயல் வெளிக்குச் சென்று இயற்கை உபாதை கழிக்க இரவு நேரங்களில் அச்சத்துடனே சென்று வருகிறேன். எனது அப்பா இறந்து 14 வருடம் ஆகிவிட்டதால் எனக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை. நான் அரசு கல்லூரி விடுதிலேயே தங்கிப் பயின்று வருகிறேன். ஆகையால் எங்கள் குடும்பத்தின் நலன் கருதியும் எங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் எங்களுக்கு அரசு வீடு மற்றும் தனிநபர் கழிப்பறையை அமைத்துத் தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் வீடு வழங்கும் திட்டம், ஒன்றிய அரசின் சார்பில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம், குடிசை இல்லா வீடுகள் திட்டம் என பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வீடு இல்லாதவர்களுக்கும் கூரை வீட்டில் வசிப்பவர்களுக்கும் அந்தந்த கிராம ஊராட்சி தலைவர்களே பயனாளிகளைத் தேர்வு செய்து வீடு கட்டி தரப் பரிந்துரை செய்வார்கள். இவ்வளவு நாட்களாகக் கூரை வீட்டில் வாழ்ந்து வரும் இவருக்கு ஏன் கிராம ஊராட்சி பரிந்துரை செய்யவில்லை? அதிகாரிகள் ஆய்வில் இது தெரிய வரவில்லையா என்கிற கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இதனை உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆய்வு செய்து அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.