“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஆறாவது புத்தக திருவிழா நிகழ்வு வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை 80 அரங்குகளில் பல லட்சம் புத்தங்களோடு நடைபெற இருக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய ஆளுமைகள், அரசு உயரதிகாரிகள், படைப்பாளிகளின் சொற்பொழிவுகள், சாதனையாளர்களுக்கு விருதுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களான நூறு நாள் வேலைத்திட்டப் பகுதிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நேற்று ஒரு மணி நேரம் வாசிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நிகழ்வில் ஒரு லட்சம் மாணவ மாணவியர்களோடு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்று புத்தகம் வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், “வாசிப்புப் பழக்கம் மாணவர்களின் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சி. நினைவாற்றலை மேலும் வளர்க்கும், படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் மேம்படக்கூடும். உலகில் பெரிய மாமேதைகள் அனைவரும் புத்தக வாசிப்பினாலும் உருவானவர்களே. இன்றைய விஞ்ஞான உலகில் மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஆகையால் இன்றைய குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அதன் நன்மைகளையும் எடுத்துரைத்து புத்தகம் வாசிக்கத் தூண்ட வேண்டும். அதிலும் மிக முக்கியமாக மாணவிகள் வாசிக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேற்று ஒரு மணி நேரம் புத்தகங்களை வாசித்தனர்.