கலெக்டர் – டி.ஆர்.ஓ மோதல். – பாதிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் என்கிற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ரத்தினசாமி குறித்து நாம் வெளியிட்ட செய்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இந்நிலையில் இதுப்பற்றி நம்மிடம் பேசிய மாவட்ட வருவாய்த்துறை அலுலவர் இரத்தினசாமி அலுவலக தரப்பை சேர்ந்தவர்கள், டி.ஆர்.ஓ. சார் மிக நேர்மையானவர், யார் மனதும் புண்படக்கூடாது என நடந்துக்கொள்பவர். அவர் சில நாட்கள் அலுவலகத்துக்கு வராமல் இருந்தாலும் அவர் தனது பணிகளை தொடர்ந்து செய்துக்கொண்டுதான் இருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வர் வருகையின்போது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர், முதல்வர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மைதான். அதற்கு காரணம், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) பணியிடம் நீண்ட மாதமாக காலியாகவுள்ளது. அந்த இடத்துக்கு பொறுப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றாலும் அவரால் முழு பணியை கவனிக்க முடியவில்லை. இதனால் முதல்வர்களுடன் வந்த துறை செயலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரும் பணியில் டி.ஆர்.ஓ ஈடுப்பட்டிருந்தார்.
இது மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தெரியும். 10 நாட்கள் எல்லாம் அலுவலத்துக்கு வராமல் இருந்தால் மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பாமல் இருக்கமாட்டார். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியருடன் பணியாற்றி வருகிறார். இருவரும் ஒத்த கருத்துடையவர்கள், இருவருக்கும் மோதல் என்பதெல்லாம் தவறானது. அதேபோல் டி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு தினமும் வரவேண்டும் என்கிற அவசியமில்லை, கேம்ப் அலுவலத்தில் இருந்தும் பணியாற்றலாம். ஜூம் மீட்டிங் பல நடந்துள்ளன. அதில் கேம்ப் அலுவலகத்தில் இருந்தபடியே கலந்து கொண்டுள்ளார். தலைமை செயலாளர் நடத்திய பல வீடியோ கான்பரன்சிங் கூட்டங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலந்து கொண்டுள்ளார். கரோனாவை கண்டு அவர் பயப்படவில்லை. அதே நேரத்தில் கரோனா பரவலால் முன் எச்சரிக்கையாகவும் செயல்படுகிறார்.
வருவாய்த்துறை ஆய்வாளர், உதவியாளர்கள் பதவி உயர்வுக்கான பைல் அவரது கையெழுத்துக்கு வந்தது, அதில் உடனடியாக கையெழுத்திடாமல் வைத்திருந்ததுக்கு பல நிர்வாக காரணங்கள் உள்ளன, அதனை தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார்கள். கலெக்டருக்கும் – டி.ஆர்.ஓவுக்கும் மோதல் என்பதெல்லாம் கிடையாது. இருவர் அலைவரிசையும் ஒத்துப்போகிறது. அதனால்தான் இருவரும் 3 வருடங்களை கடந்தும் ஒரே மாவட்டத்தில் பணியாற்றுகிறார்கள்.
கலெக்டருடன் மோதல் வரும் சூழல் ஏற்பட்டால் டி.ஆர்.ஓ. ஒதுங்கி சென்றுவிடும் சுபாவம் கொண்டவர். உயர் அதிகாரிகளுடன் மோதுவது, தனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளின் மனம் நோகும்படி நடந்துக்கொள்வது என்பது போன்றெல்லாம் அவர் எப்போதும் நடந்துக்கொள்ளமாட்டார். அவர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தபின்புதான் திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை திட்டம், ரிங் ரோடு திட்டம் போன்றவை வேகம் பிடித்துள்ளன. இதையெல்லாம் அவர் என்னால்தான் இது வேகமாக நடைபெறுகிறது என்று வெளிப்படுத்த விரும்பாதவர் என்றார்கள்.