கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாகச் சேலம், சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இறைச்சிக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாகக் கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இறைச்சிக்கடைகளில் 30 வினாடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் நிற்க அனுமதியில்லை. விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத இறைச்சிக்கடைகள் சீல் வைக்கப்படும்.கோவை மாநகராட்சியில் மிகவும் குறுகலான பகுதிகளில் இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதியில்லை.இறைச்சிகளை கடைகளில் தொங்கவிடவோ,வாடிக்கையாளர் வந்த பின் அவர்கள் முன் வெட்டவோ கூடாது. வாடிக்கையாளர்கள் வரும் முன்பே ரத்தம்,குடல்,ஈரல் போன்ற இறைச்சிகளைப் பார்சலில் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்." என்று இறைச்சிக் கடையின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.