கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக 24-ந்தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் அனைத்துத் துறை செயலாளர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் அரை மணி நேரத்தில் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் முகப்புக் கதவு மூடப்பட்டது. அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 144 தடை உத்தரவு நடைமுறையின் போது, குடிநீர் தேவையை தடையின்றி பூர்த்தி செய்ய தமிழ்நாடு அரசு குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மக்களிடமிருந்து புகார் வராத வகையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல் குடிநீர் வாரிய ஊழியர்கள் வெளியே செல்லும்போது பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்ல வேண்டுமெனவும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு குடிநீர் வாரியம்.