தமிழக விவசாயிகள் தாங்கள் விதைப்புக்கு முன்பும் அறுவடையின் போது இயற்கையை வணங்கி விளைபொருளை வைத்து வழிபட்ட பிறகே வீட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கம். விவசாயிகளின் முதல் கடவுள் விவசாயம். அதே போல தென்னங்கன்றுகள் நடவு செய்து பராமரித்து அந்த மரங்கள் முதல் பாளை வெளிவரும் போது அதற்காகப் பொங்கல் வைத்து வழிபடும் பழக்கம் இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டி அரமேட்டில் விவசாயி வெள்ளைக்கண்ணு அழகு என்பவர் தோட்டத்தில் மா, பலா, வாழை, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, நெல்லி, உள்ளிட்ட பல வகை மரங்களும் தென்னை மரங்களும் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மறைந்த சேந்தன்குடி கற்பகசோலை மரம் தங்கச்சாமி தனது தோட்டிலும் பொது இடங்களிலும் ஒவ்வொரு தேசிய, மாநில தலைவர்களின் பிறப்பு, இறப்பு நாட்களை நினைவு கூறும்விதமாக மரக்கன்றுகளை வைத்து வளர்த்து வந்தார். அவரது தோட்டத்தில் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், ராஜிவ்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நினைவாக நடப்பட்ட ஏராளமான மரங்கள் உள்ளது. பல தலைவர்களின் நினைவாக நடப்பட்ட மரங்கள் கஜா புயலில் சாய்ந்து விட்டது.
அதே போல அழகு தனது தோட்டத்தில் சுமார் 90 தென்னை கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார். இப்போது மரங்களாக பலன் தருகிறது. இதில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மற்றும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் நினைவாகவும் தென்னங்கன்றுகளை நட்டு வளர்க்கிறார். அந்த இரு தென்னை மரங்களும் தற்போது பாளை தள்ளியுள்ளது.
இதைப் பார்த்த அழகு, இதில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் விவசாயிகள் செய்வது போல அழகு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், குழந்தைகளும் பால், பழம், பூ, இனிப்புப் போன்றவற்றை தட்டுகளில் வைத்து சீர் எடுத்துக் கொண்டு பொங்கல் கூடை சுமந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தென்னைமரத்தின் முன்பு பொங்கல் வைத்துச் சிறப்புப் பாளை பூஜை நடத்தி வழிபட்டனர்.
மேலும் பொங்கல் பிரசாதங்களை அனைவருக்கும் வழங்கியதுடன் அங்கேயே சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டு கலந்துகொண்ட அனைவருக்கும் கோழி அடித்து விருந்து உபசரிப்பு நடத்தினர். கிராமங்களில் இன்னும் இதுபோன்ற கலாச்சார நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் உள்ளது.