“பொங்கல் தொகுப்புடன் தேங்காயை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும். இல்லை என்றால், வரும் ஜனவரி முதல் வாரத்தில் தமிழக பா.ஜ.க. விவசாய அணி சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக தேங்காய் வழங்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்” என பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் கூறியுள்ளார்.
அக்கட்சியின் விவசாய அணி சார்பில் மாநில நிர்வாகிகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்த பயிற்சி பட்டறை ஈரோட்டில் 29ந் தேதி நடந்தது அதை துவக்கி வைத்த நாகராஜ் பிறகு நம்மிடம் பேசும் போது, “பா.ஜ.க.வை கண்டு முதல்வர் ஸ்டாலின் அச்சப்பட தொடங்கி விட்டார். நாங்கள் தொடர்ந்து அரசின் குறைகளை, தவறுகளை வெளிப்படுத்தி வருகிறோம். விவசாயிகளிடமிருந்து பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்ய பாஜக விவசாய அணி முதலில் போராட்டம் நடத்தியது. இப்பொழுது கொள்முதல் செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஒரு கரும்பை ரூ. 35 என்ற விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு செய்தது போல் திமுகவினர் தோட்டத்தில் இருந்து மட்டும் கரும்புகளை வாங்க கூடாது. கட்சி பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளிடமிருந்தும் கொள்முதல் செய்ய வேண்டும்.
அதேபோல் நீண்ட காலமாக தேங்காய்க்கு உரியவிலை கிடைக்கவில்லை. எனவே அரசு, தேங்காயையும் கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும். அப்படி அரசு செய்யவில்லையென்றால் வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தமிழக பொது மக்களுக்கு இலவசமாக தேங்காய் விநியோகிக்கும் போராட்டத்தை பா.ஜ.க. நடத்தும்.
நமது மாநிலத்தில் தஞ்சை நெற்களஞ்சியமாக உள்ளது. இங்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், பஞ்சாபில் கொள்முதல் செய்ய முடிவு எடுத்ததாக தெரிகிறது. இது முழுக்க முழுக்க கமிஷன் பெறும் ஆதாயத்துக்காக மட்டுமே இருக்கலாம் என்று கருதுகிறோம். அன்னூரில் விவசாயிகள் கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். அங்கு 117 குளங்கள் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பயன்பெறும். அங்கு அதிமுகவினர் சுமார் 1000 ஏக்கர் நிலம் வைத்துள்ளனர். அந்த நிலத்தை பறிக்கத்தான் சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் அறிவிக்கப்பட்டு அது யாருக்கோ கொடுப்பதற்கான உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.
அன்னூரில் சிப்காட் தொழில்பேட்டை அமைந்தால் அருகில் உள்ள பவானிசாகர் அணையின் நீர் மாசுபடும். எனவே இந்தத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இதேபோன்று பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாயிகள் நிலம் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்காக பாஜக பெரிய போராட்டத்தை நடத்தியது. பாஜக எப்போதும் வளர்ச்சி பணிகளுக்கு எதிரி அல்ல. ஆனால், விவசாயிகள் பாதிக்கப்பட்ட கூடாது. ஒரு விவசாயிடமிருந்து ஒரு ஏக்கர் எடுத்தால், அவருக்கு இரண்டு ஏக்கர் விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டம் 99% முடிந்துள்ளது. 70 மீட்டர் நீளத்திற்கு மட்டும் பைப் லைன் போட வேண்டும். இது குறித்து பாஜக ஏற்கனவே போராட்டம் நடத்தியது. முதல்வர் விரைவில் திட்டம் முடியும் என்றார். அமைச்சர் முத்துசாமி ஜனவரி 15-ல் முடியும் என்கிறார். ஜனவரி 15ல் திட்டத்தை துவக்காவிடில் பாஜக பெரும் போராட்டம் நடத்தும்.
மத்திய அரசு பயிர் காப்பீடு திட்டத்தில் தனது பங்கை குறைக்கவில்லை. ஆனால், மாநிலத்தில் தான் பயிர் காப்பீடு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வருகிறது. அதனால் தான் சிறு தானிய உற்பத்தி 45 சதம் உயர்ந்துள்ளது. பவானிசாகர் பிரதான கால்வாயில் நடப்பாண்டு நான்கு முறை உடைப்பு ஏற்பட்டுள்ளது. பெருந்துறை அருகே ஏற்பட்ட உடைப்பு கால்வாயில் அடித்தளத்தில் உள்ள கான்கிரிட் உடைந்தது. நீர்வளத்துறை முறையாக கால்வாயை பராமரிக்காதது இதற்கு காரணம். நீர்வளத்துறை முறையாக கால்வாயை பராமரிக்கவில்லை. அதனால் தான் அவ்வப்போது உடைப்பு ஏற்படுகிறது. பிரதமர் பயிர் காப்பீடு, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000, சிறுதானியம், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, வேளாண் உட்கட்டமைப்பு, வேம்பு கலந்த யூரியா, கிசான் கிரெடிட் கார்டு திட்டம் என பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். ஆனால், மாநில அரசு இத்திட்டங்களை தனது திட்டம் போல நடைமுறைப்படுத்துகிறது. இதை சுட்டிக்காட்டி மக்களிடம் பிரதமரின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டம் நடைபெறுகிறது” என்றார்.