திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், “கூட்டணிக் கட்சிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை ஒதுக்கக் கூடாது. இது தேர்தல் ஆணையத்தின் சின்னங்கள் ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உள்ளது. இருந்தாலும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து இந்தத் தவறை செய்து வருகிறது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னத்தை அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது” என கோரிக்கை வைத்திருந்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான சின்னம் ஒதுக்கீடு பணி முடிவடைந்துவிட்டது. அதனால், இந்தக் கோரிக்கையை இந்தத் தேர்தலில் நிறைவேற்ற முடியாது” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “மனுதாரரின் கோரிக்கையை இந்தத் தேர்தலில் அமல்படுத்துவது சாத்தியமில்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஜூன் மாதம் மூன்றாவது வாரம் விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்து வழக்கை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.