Skip to main content

ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவீர்களா? - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

Published on 27/07/2024 | Edited on 27/07/2024
 CM stalin questioned  Would you treat a Chief Minister like this?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செவ்வாய்க்கிழமை(23.7.2024) நாடாளுமன்றத்தில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும், சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக படுதோல்வியை சந்தித்ததால் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல், பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று குற்றம்சாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். அதேபோன்று மத்திய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். 

நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையிl இன்று டெல்லியில் நடைபெற்றது. நாட்டின் பல மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். இதில் தனது மாநிலம் குறித்த கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா மட்டும் கலந்து கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி பாதி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். 

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, “எதிர்க்கட்சிகளில் இருந்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரே முதல்வரான எனக்கு முழுமையாகப் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை; எனது மாநில பிரச்சனை குறித்துப் பேச முற்பட்டபோது, என்னுடைய மைக்கை அனைத்து அவமதித்துவிட்டனர்” எனக் குற்றம் சாட்டினார்.  இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூத வலைதளபதிவில், “இதுதான் கூட்டாட்சி தத்துவமா? ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவீர்களா? எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரிகளைப் போல நடத்தக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்