இஸ்ரோ சார்பில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் டிவி - டி1 ராக்கெட் மூலம் இன்று (21.10.2023) காலை 8 மணிக்கு தரையில் இருந்து 16.6 கி.மீ. தூரம் வரை ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய தயாராக இருந்தது. அப்போது நிலவிய மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 8.30 மணிக்கு கவுண்டவுன் மாற்றி அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 8.45 மணிக்கு என கவுண்டவுன் மாற்றி அமைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படுவதற்கு 5 நொடிகளுக்கு முன்பு இந்த சோதனை நிறுத்தப்பட்டு வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், ககன்யான் மாதிரி சோதனை எந்த தேதியில் நடத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மாதிரி சோதனைக்கான டிவி - டி1 ராக்கெட் பாதுகாப்பாக இருக்கிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இந்த சோதனை மீண்டும் இன்று காலை 10 மணியளவில், ககன்யான் திட்டத்துக்கான மாதிரி விண்கலத்தை சுமந்து செல்லும் டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டர் திறன் கொண்ட ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. மேலும் மாதிரி விண்கலம் விண்ணில் 17 கி.மீ. தொலைவுக்கு ஏவப்பட்டு பின்னர் பாராசூட் மூலமாக பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடலில் விழுந்த ககன்யான் பயணிகள் கலன் இந்திய கப்பல் படையால் மீட்கப்பட்டது. இதன் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் இஸ்ரோவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில், “டிவி-டி1 ராக்கெட் மூலம் ககன்யான் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட இஸ்ரோவிற்கு வாழ்த்துகள். இந்த சாதனை இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இஸ்ரோ குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார்.