தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/06/2022) திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், "எண்ணும் எழுத்தும்" என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கி வைத்து, "எண்ணும் எழுத்தும்" மாதிரி வகுப்புகளைப் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், வடகரையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பத்தாவது படிக்கும் மாணவர்களின் வகுப்பறையில் அமர்ந்து, தமிழ் ஆசிரியை நடத்திய தமிழ் பாடம் நடத்தும் முறையைப் பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது, தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.