சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 ஆயிரத்து 359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 1000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.11.2024) வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர், நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை இயக்குநர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “காவல்துறையினர் என்றால் யார் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை சொல்லி, உங்களை வரவேற்க விரும்புகிறேன். தங்களால் உருவாக்கப்படாத பிரச்சினைகளுக்கு, தீர்வு காண வேண்டியவர்கள். முரண்பாடு ஏற்படும் இடங்களில், முதல் ஆளாக நிற்க வேண்டியவர்கள். எல்லா விதங்களிலும் சகிப்புத்தன்மையுடன் நடக்க வேண்டியவர்கள். உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன், நடந்துகொள்ள வேண்டியவர்கள். பெற்ற சிறந்த பயிற்சிக்கு ஏற்ப கடமையுணர்ச்சி மிக்கவர்களாக, இருக்க வேண்டியவர்கள். இப்படி இன்ப, துன்பங்களைத் துறந்து, ஊண், உறக்கம் மறந்து, கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு பணியாற்ற வந்திருக்கக்கூடிய காவலர்கள் அனைவரையும் வருக, வருக என நான் வரவேற்கிறேன்.
165 ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க தமிழ்நாடு காவல்துறையில், நீங்கள் எல்லோரும் அடியெடுத்து வைக்கிறீர்கள். அதற்காக முதலில் என்னுடைய வாழ்த்துகள். திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், காவலர்களை போற்றும் அரசாக, காவல்துறையில் இருப்பவர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றித் தரும் அரசாக, நேர்மையாக, திறமையாக செயல்பட்டு மக்களைக் காப்பாற்றும், காவல்துறையினருக்கு பக்கபலமாக இருக்கும் அரசாக அமைந்திருக்கிறது. அதனால்தான், இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையாக, தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் மறுக்கமுடியாது. அதன் அடையாளமாகதான் சமீபத்தில் 'குடியரசுத் தலைவர் கொடி அங்கீகாரம், காவல் பதக்கம், 75ஆவது ஆண்டு விடுதலை நாள் விழா பதக்கம், தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து பணியாற்றுவது பொன்விழா கொண்டாட்ட பதக்கம் என்று வழங்கி, தமிழ்நாடு காவல்துறையில் செயல்படும் அனைவரையும் பாராட்டியிருக்கிறோம். ஊக்கப்படுத்தி இருக்கிறோம்.
இன்னும் சொல்லவேண்டும் என்றால், காவல்துறையை மேம்படுத்துவதற்காக காவலர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்துதரவும் முதன்முதலாக காவல் ஆணையம் அமைத்ததுடன், அதிகமான எண்ணிக்கையில் காவல் ஆணையங்களை அமைத்து, பல்வேறு முன்னோடி நலத்திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசு தான். கடந்த மூன்று ஆண்டுகளில் காவலர்கள் முதல் டி.எஸ்.பி., வரை 17 ஆயிரத்து 435 நபர்களை காவல்துறையிலும், ஆயிரத்து 252 பேரை தீயணைப்புத் துறையிலும், 366 பேரை சிறைத் துறையிலும் புதிதாக நியமித்திருக்கிறோம். அவர்களும் பாராட்டும் வகையில், சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.