Skip to main content

இளைஞர்கள் உருவாக்கிய உலகத்தை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள் 

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

 

வீட்டுக்கு வீடு அவசியம் ஒரு நூலகம் வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஊரிலும் நூலகம் திறக்கப்பட்டு அதற்கான புத்தகங்கள் மற்றும் தினசரி வார மாத இதழ்கள் வாங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கிராம இளைஞர்கள் பயனடைந்தனர். இதற்கு உதாரணம் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சிக்கு ஒரு விழாவிற்கு வருகை தந்திருந்தார்.  


 

Library




அந்த விழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் மாணவிகள் ஆகியோருடன் கலந்துரையாடும்போது, அப்துல் கலாம் அவர்களிடம் படிப்பு சம்பந்தமாக சந்தேகங்களை கேட்க சொன்னார். அப்போது ஒரு மாணவன் எழுந்து ஐயா நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும். அதற்கு தங்களின் ஆலோசனை கூறுங்கள் என்று கேட்டார் அந்த இளைஞன்.
 

அப்போது கலாம் அவர்கள் உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஒரு நூலகத்துக்குச் சென்று பல்வேறு புத்தகங்களையும் தினசரி மாத இதழ்களையும் தொடர்ந்து படியுங்கள் என்றார் கலாம். ஐயாவின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன் அதேபோன்று அரசு  நூலகத்துக்குச் சென்று புத்தகங்களையும் தினசரி பத்திரிகைகள் என அனைத்தையும் படித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாக உருவாக்கியுள்ளார்.
 

ஒரு நூலகம் ஒரு இளைஞரின் அறிவுக்கண்ணை திறந்ததற்கு இது ஒரு உதாரணம். இது மட்டுமல்லபடிப்பதன் மூலம் ஒழுக்கம் பண்பாடுகளை போதிக்கும் ஆலமரம் போன்றது நூலகம். காட்சி ஊடகங்கள், வாட்ஸ் அப், முகநூல் என விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அதில் வரும் தகவல்கள் அனைத்துமே மின்னல் போல பின்னி மறைந்துவிடும். பல நாள், பல ஆண்டுகள் கடந்த பிறகும் அதில் வரும் செய்திகளை தேடி எடுக்க முடியாது. ஆனால் கல்வெட்டு ஓலைச்சுவடி பிறகு அச்சு ஊடகம் என வரலாற்று செய்திகளை ஆவணங்களையும் நமது முன்னோர்கள் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாகவும்  வரலாற்று பாதுகாக்கப்படுகிறது. 


 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுவனூர் கிராமம். இந்த கிராமத்தில் கிராமத்தில் டிவி வெட்டி மூலம் ஊர் மக்கள் செய்திகளை பார்ப்பதற்காக ஒரு சிறிய கட்டிடம் கட்டப்பட்டு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட டிவி வைத்து மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். காலப்போக்கில் வீட்டுக்கு வீடு டிவி அரசு வழங்கிய பிறகு அந்த கட்டிடம் பயனற்று கிடந்துள்ளது. இதை பார்த்த அவ்வூரைச் சேர்ந்த பெரியார் திராவிடர் கழக இயக்கத்தைச் சேர்ந்த பெரியார் வெங்கட் தலைமையில் பல இளைஞர்கள் ஒன்று கூடி அந்த டிவி கட்டிடத்தில் ஒரு நூலகத்தை திறப்பதற்கு முயற்சி செய்து அதை நடைமுறைப்படுத்தினர்.
 

அது பற்றி பெரியார் வெங்கட் நம்மிடம், இந்த கட்டிடத்தில் நூலகம் திறப்பதற்காக ஊராட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை முறையாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. அதோடு மாவட்ட நூலக அதிகாரியிடம் முறையாக அனுமதி பெற்று நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தில் சுமார் 15 ஆயிரம் செலவில் புத்தகங்கள் தினசரி மாத வார இதழ்கள் என வாங்கி வைத்து படித்து வந்தோம். நாங்கள் மட்டுமல்ல ஊர் இளைஞர்களும் மாணவ மாணவிகளும் இதில் பிடித்து பயன்பெற்றனர்.


 

இந்த நேரத்தில் ஊரில் சிலர் இந்த கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அதிகாரிகளிடம் தவறான புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ரிஷிவந்தியம் ஒன்றிய ஆணையர் ரவி இங்கு வந்து உங்கள் ஊரில் பிரச்சனை உள்ளதால் இந்த கடிதத்தில் நூலகம் செயல்பட கூடாது என கூறி இழுத்து பூட்டி விட்டு சென்றுவிட்டார்.
 

இதுசம்பந்தமாக வட்டாட்சியர் அவரிடம் நேரடியாக சென்று முறையிட்டோம். உங்கள் ஊரில் சிலர் பிரச்சனை செய்வதால் நாங்கள் தலையிட முடியாது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் தட்டிக் கழிக்கிறார்கள். அதே நேரத்தில் ஊரில் பயன்பாடு இல்லாமல் இருந்த வானொலி மன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதைப்பற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் அதை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நூலகத்தை செயல்படுத்த அனுமதி அளித்தால் போதும் என்கிறார் பெரியார் வெங்கட்.
 

இது சம்பந்தமாக ரிஷிவந்தியம் ஒன்றிய ஆணையர் ரவியிடம் கேட்டோம், அது சம்பந்தமாக பதில் கேட்டு சொல்வதாக கூறியவர், அந்த ஊர் ஊராட்சி செயலாளர் அவரை நம்மிடம் பேச வைத்தார். அவர் நம்மிடம் கூறும்போது, அந்த ஊரில் நூலகம் முன்பு செயல்பட்டது உண்மை, பிறகு அது சரியாக இயங்கவில்லை, அந்த அறையில் உட்கார்ந்து கொண்டு இளைஞர்கள் அரட்டை அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை அதிகாரிகளிடம் ஊர் மக்கள் சிலர் கூறினார்கள். அதையடுத்து அந்த நூலகம் அதிகாரிகளா பூட்டப்பட்டது. அதே நேரத்தில் அதே ஊரில் அரசு சார்பில் ஒரு பொது நூலகம் இயங்கி வருகிறது. அதில் சென்று படிக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வராமல் இருக்கவே இந்த முடிவை அதிகாரிகள் எடுத்து உள்ளனர் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்கிறார் ஊராட்சி செயலாளர் எப்படி இருந்தாலும் ஒரு நூலகம் மூடப்படுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் அவ்வூர் இளைஞர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்